Devotion to St. Antony in Tamil (Day 10)

13-ம் நூற்றாண்டில் அல்பிஜூவா (Albigeois) என்னும் பிரிவினைக் காரரை எதிர்த்த அர்ச்சியசிஷ்டவர்கள் அர்ச். கன்னிமரியாயின் கொடியை விரித்து அந்தக் கொடியின் கீழ் சத்துருக்களோடு போராடிச் செயங் கொண்டார்கள். பசாசின் தலையை நசுக்கினவள் பிரிவினைக்காரருடைய பயங்கரமாய் எப்போதும் இருந்தாள் என்பதற்குச் சந்தேகமில்லை, அர்ச். பிரான்சிஸ்கு தமது சபையில் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மாதாவின் மட்டில் விசேஷமான பக்தி விளங்கும்படி செய்துவந்தார். அர்ச். அந்தோனியார் இன்னும் ஒருபடி மேலே தேவமாதாவினுடைய மகிமையைப் பிரசித்தப்படுத்தினார். தேவமாதாவினால் விசேஷமான விதமாய்த் தெரிந்து கொள்ளப்பட்ட அவர், தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளிப்போன திருநாளன்று பிறந்த அவர், தேவமாதா சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் மோட்சத்துக்கு எழுந்தருளிப் போனாள் என்பது இன்னமும் திருச்சபையில் வேத சத்தியமாகப் பிரசித்தப்படுத்தப்படாதிருந்தபோதிலும் அது திருச்சபை பரம்பரையால் எப்போதும் விசுவசிக்கப்பட்டு வந்ததென்று நிரூபிக்கத் தேடினார். அர்ச். அந்தோனியார் அதை வேத சத்தியமாக விசுவசித்து வந்தார். ஆனால் அர்ச். பிரான்சிஸ்கு சபையாரால் வேத சத்தியமாக எண்ணப்படாதபடியால் அர்ச். அந்தோனியார் தேவமாதா மோட்சஷத்துக்கு எழுந்தருளிப்போன திருநாளன்று அவளை நோக்கி: “ஓ மகிமை பொருந்திய ஆண்டவளே’ என்னும் கீர்த்தனையைப் பக்தி உருக்கத்தோடு செபித்தபோது, பரிசுத்த கன்னிமரியம்மாள் மகா மகிமைப் பிரதாபத்தோடு அவருக்குக் காட்சி தந்து தாம் ஆத்துமத்தோடும் சரீரத்தோடும் மோக்ஷத்துக்கு எழுந்தருளிப் போனது உண்மையென்று அறிவிக்கத் திருவுளமானாள்.

அர்ச். கன்னிமரியம்மாளுடைய மகிமை முடியில் இந்த விசேஷ மகிமையையும், சர்வேசுரன் திருச்சபையைக் கொண்டு, அவள் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த சத்தியத்தை 9-ம் பத்திநாதர் என்னும் பாப்பானவர் 1854 ம் வருஷத்தில் ஆடம்பரமாய் ஸ்தாபித்து, விளம்பரம்  பண்ணினது போல, இப்போது மகா பிரபலியத்தோடுதிருச்சபையை ஆண்டுவரும் பாப்பானவருடைய வாயினால் ஸ்தாபித்து விளம்பரம் பண்ணத் தயை கூறும்படி வேண்டிக்கொள்ளக்கடவோம். ஏற்கனவே இப்போது திருச்சபையை ஆண்டுவரும் பாப்பானவரும் இந்தச் சத்தியத்தைப் பிரசித்தப்படுத்து வாரென்று அநேகர் எண்ணியிருக்கிறார்கள். அர்ச், அந்தோனியார் தேவமாதாவின் மட்டில் எப்போதும் விசேஷ பக்தி பற்றுதலாயிருந்தார். தம்முடைய அவசரங்களில் எப்போதும் அவருடைய ஒத்தாசையை மன்றாடுவார். தம்முடைய யாத்திரைகளில் அவளுடைய அதி தோத்திரங்களைப் பாடுவார்.

அர்ச், அந்தோணியாருக்குத் தேவமாதா ‘பரலோக வரங்கள் நிறைந்த கணவாய், ‘பரம இரகசியமான திராட்சைக்கொடி, ‘அடைபட்ட கதவு‘ “தேவ வரப்பிரசாதத் தினுடையவும், கீழ்ப்படிதலினுடையவும், தாழ்ச்சியினுடை யவும் வீடு,’ “அடைக்கலப்பட்டணம்,” “சர்வேசுரனுடைய சிம்மாசனம்,’ இவ்விதமான மகிமை பொருந்திய பட்டங்கள் தரித்த ஆண்டவளாயிருக்கிறாள்.

மெய்யாகவே அர்ச், அந்தோனியார் செய்த பிரசங்கங்களிலெல்லாம் அர்ச், தேவ மாதாவைக் குறித்துப் பேசினார். ஆபத்திலோ, அவசரத்திலோ, சங்கடங்களிலோ எப்போதும் அந்தோனியார் தேவமாதாவினுடைய அடைக்கலத்தை நாடிப்போவார். அவர் மரணத் தருவாயில் “ஓ மகிமை பொருந்திய ஆண்டவளே, என்னும் வேண்டுதலைச் சொன்னபோது தேவமாதா அவருக்குத் தரிசளையாகி ஒத்தாசை செய்ததாளல்லவோ, தாம் அந்தச் சமயத்தில் தேவமாதாவை மாத்திரமல்ல, தன் சர்வேசுரனையும் பார்க்கிறதாகச் சந்நியாசிகளிடம் சொல்லிப் பாக்கியமான மரணமடைந்தார்.

அர்ச், தேவமாதாவை நாம் நோக்கி “நல்ல ஆதரவு மாதாவே (Notre-Dame da Bon Secours)” என்று சொல்லும்போது அவள் நமது மட்டில் விசேஷ பிரியங் கொள்ளுகிறாள். பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற மாதாவை, கஷ்டப் படுகிறவர்களுக்குத் தேற்றரவாயிருக்கிற மாதாவை நாம் நோக்கி மன்றாடும்போது, நம்முடைய அவசரங்களில் அத்திரு மாதா நமக்கு ஒத்தாசை செய்கிறாள்.

செபம்

பரலோக பூலோக இராக்கினியான அர்ச். (தேவமாதாவின்மட்டில் உமக்குள்ள பக்தியினால் உமது சீவியகாலமுழுமையும் விளங்கி, உமது மரண சமயத்தில் அவளுடைய தரிசனை அடையப் பாத்திரமான அர்ச். அந்தோனியாரே, பாவிகளாகிய நாங்களும் உமது நன்மாதிரியைப் பின்பற்றி அந்தத் திவ்விய மாதாவின் மட்டில் பக்தி வைத்து அவளுடைய உபகார சகாயங்களை அடையக் கிருபை செய்தருளும். -ஆமென்.

நற்கிரியை – தேவமாதாவைக் குறித்து ஒருசந்தி இருக்கிறது.

மனவல்லயச் செபம் – மோட்ச இராக்கினியின் பிரிய தாசனான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Leave a comment