Featured

பதித மார்க்கத்தாரை மனந்திருப்பும் ஜெபமாலை!

பல வருடங்களுக்கு முன், ஓர் மேற்கத்திய நாட்டில், பெயாட்ரிஸ் அலென் என்ப வள் வசித்து வந்தாள். அவள் ஓர் ஆங்கிலேயப்பிரபுவின் மனைவி. பிரபுவின் குடும்பம் புராட் டஸ்டான்டு பதிதத்தை அனுசரித்தது. பெயாட்ரிஸ், தப்பறையான அப்பதித மதத்தின் மீது, பற்று கொண்டிருந்தாள். அவள் வீட்டினருகில், பிரிட்ஜெட் மர்பி என்ற ஐயர்லாந்து நாட் டைச் சேர்ந்த ஓர் மூதாட்டிதனியாக வசித்து வந்தாள்; அவள் சத்திய கத்தோலிக்க வேதத் தைச் சேர்ந்தவள். சகல வேத கடமைகளையும் பிரமாணிக்கத்துடன் அனுசரித்து வந்தாள். அவள் எப்போதும், மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் ஜெபமாலை ஜெபிப்பதை பெயாட்ரிஸ் கவனித்து வந்தாள். பதித மதத்தில் பற்றுடைய பெயாட்ரிஸ், மற்ற பதிதரைப் போல, ஆங்காரத்தால் ஏவப்பட்டவளாக, சத்திய வேதத்தின் கோட்பாடுகளையும், ஜெபங்

களையும், பக்தி முயற்சிகளையும், இழிவாகக் கருதி, அவற்றை, பாப்பு மார்க்கத்தாரின் குருட்டு பக்தியென்று கேலி செய்வாள்.

தான் விசுவசிக்கும் பதிதமதமே, உண்மையான வேதம் என்று கருதிய பெயாட்ரிஸ், அண்டை வீட்டினளான அக்கத்தோலிக்க மூதாட்டியைத் தனது பதித மதத்திற்கு எப்படியா வது மனந்திருப்ப வேண்டும் என்பதில் கவனமாக இருந்தாள். தன்னுடைய மதத்தின் வெளிச்சத்திற்கு, கத்தோலிக்கரை கூட்டி வர வேண்டும் என்று நினைத்த பெயாட்ரிஸ், ஒரு நாள், மர்பி பாட்டியிடம், பாட்டி, ஏன் ஒரே மாதிரியான வார்த்தைகளையேக் கொண்டு ஜெபிக்கிறீர்கள்? அது உங்களுக்கு சலிப்பாக இல்லையா? படிப்பறிவு இல்லாதவரின் ஜெபம் தானே அது? என்று கேலியாகக் கேட்டாள். அதைக் கேட்ட பாட்டி, “என்ன! ஜெபமாலை யைப் பற்றியா, அவ்வாறு என்னிடம் கேட்கின்றாய்? அது, தனிமையில் இருக்கும் எனக்கு, எவ்வளவு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருகிறது ! துன்பத்திலும் துயரத்திலும் என்னை, அவ்வுன்னத ஜெபம் தேற்றுகிறது. என் இருதயத்திற்கு சர்வேசுரனுடைய சமாதானத்தை, அளிக்கின்றது. அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களை, ஜெபமாலையை ஜெபிக்கும் யாவரும் பெற்றுக் கொள்வர். ஆதலால், ஆன்ம சரீர ஆபத்துக்களிலிருந்தும், பசாசின் சகல தீமைகளிலிருந்தும், அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். சர்வேசுரனுடைய பரிசுத்த தாயாருடன் பேசுவதை, கல்வியறிவு இல்லாதவருடைய ஜெபம் என்று நீ சொல்வது, தேவ தூஷணமல்லவா? அதற் காக நீ ஆண்டவரிடம் மன்னிப்பு கேள் ! ஜெபமாலை ஜெபிக்கும்போது, தேவமாதாவுடன் பேசுகிறேன் என்பதை, அறிந்துகொள்’ என்றாள்.

ஜெபமாலையைப்பற்றி, மர்பி பாட்டி கூறியதைக் கேட்டபெயாட்ரிஸ், பாட்டியிடம், ஜெபமாலையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததெல்லாவற்றையும் எனக்குக் கூறுங்கள் என்று கேட்டாள். காய்கறி விற்று ஜீவித்து வந்த அந்த ஏழைப்பாட்டி, அதிக கல்வியறிவு இல்லாதி ருப்பினும், ஞானத்துடனும் சந்தோஷத்துடனும், ஜெபமாலையிலிருந்த பாடுபட்ட சுரூபத் தைக் காண்பித்துக் கொண்டே, பரிசுத்த ஜெபமாலையைப்பற்றி பின் வருமாறு விவரித்தாள்: நான் ஜெபமாலை ஜெபிக்கத் தொடங்குமுன், திவ்ய சேசுவை, சிலுவையிலிருந்து இறக்கி, வியாகுல மாதாவின் மடியில் கிடத்தியதும், திவ்யதாயார் செய்தது போலவே, நானும் ஆண் டவரின் ஐந்து திருக்காயங்களையும் அன்புடன் முத்தி செய்வேன். நேச இரட்சகர் எனக்காகப் பட்ட பாடுகளுக்காக, அவருக்கு நன்றி செலுத்துவேன். என் பாவங்களை மன்னிக்கும்படி யும், நான் இறந்ததும் என்னை மோட்சத்திற்குள் சேர்த்துக்கொள்ளும்படியும் நேச ஆண்டவ ரிடம் கெஞ்சி மன்றாடுவேன்.

ஜெபமாலையில், இரு பகுதிகள். ஒன்று சிறிது அதில் ஐந்து மணிகள் மாத்திரமே உண்டு. ஆயுள் குறுகியது. என் துன்பங்கள் சீக்கிரம் முடிந்துபோகும். சாவுவிரைவிலேயே வரும். நல்ல மரணத்திற்காக நான் எப்போதும் தயாரிக்க வேண்டும். ஏனெனில் எந்நேரத்திலும் நான் சாக லாம் என்று, அது எனக்கு நினைவூட்டுகிறது. நன்மரண வரம் கேட்டு மன்றாடுவேன். ஜெப மாலையின் மற்றொரு பகுதி, பெரிய பகுதி. இனி வரவிருக்கும், முடிவில்லாத நித்திய ஜீவியத் தைப் பற்றி அது, நமக்கு நினைவூட்டுகிறது. பிரிட்ஜெட் மர்பி! எச்சரிக்கையாயிரு! நீ மோட் சத்துக்குப் போக வேண்டும். நரகத்துக்குப் போகக் கூடாது ! என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். சர்வேசுரனை மனநோகச் செய்யாமலிருப்பதற்கு, இனி, எப்பாவத்தையும் கட் டிக் கொள்ளாமல், உத்தம் கத்தோலிக்க கிறீஸ்துவளாக ஜீவிப்பதற்கு, முயல்வேன். பெரிய மணிகளில், ஆண்டவரே கற்பித்த ஜெபத்தை சொல்கிறேன். இந்த ஜெபத்திற்கு, அவர் செவி கொடுப்பார். ஏனெனில், செவி கொடுப்பதாக, அவரே வாக்களித்திருக்கிறார். இது, மிகவும் அழகு வாய்ந்த ஜெபம். ஆசையுடனும், நேசத்துடனும் கடவுளை, பிதாவே” என்று அழைக் கிறேன். நம்மை பரமானந்த சந்தோஷத்தில் ஆழ்த்துவதற்கு இந்நினைவே போதும்.

சிறு மணிகளில், மங்கள வார்த்தை ஜெபத்தை ஜெபிக்கிறேன். ஆண்டவருடைய திருமனிதவதாரத்தின் ஆச்சரியமிக்க தேவ இரகசிய நிகழ்வையே, இந்த அழகிய ஜெபத்தில் தியானிக்கிறேன். பரலோகத் திட்டத்தின் படி, அர்ச். கபிரியேல் சம்மனசானவர் தேவமாதா விடம் வாழ்த்திக்கூறிய மங்கள வார்த்தையினுடைய தேவ இரகசியத்தைப் பற்றி ஆச்சரியத்

துடன் தியானிக்கிறேன். திவ்ய இரட்சகருடைய தாயாராகப்போகும் சுபசெய்தியைக் கூறிய சம்மனசானவருடைய அதே வார்த்தைகளைக் கொண்டு, தேவமாதாவை, நாம் திரும்பதிரும்ப வாழ்த்தும் போது, தேவமாதா மிகுந்த சந்தோஷத்துடன் சர்வேசுரனைவாழ்த்துவார்கள். அது, சர்வேசுரனுக்கு மிகவும் உகந்த ஜெபமாக இருக்கும். அதனால், நாம் எவ்வளவோ அபரிமித மான தேவவரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வோம்! அடிக்கடி, மங்களவார்த்தை ஜெபத் தை ஜெபிப்பதின் வழியாக, சம்மனசானவர் கொடுத்த சந்தோஷத்தை, தேவமாதாவிற்கு, நானும் கொடுப்பதற்கு ஆசிக்கிறேன்.

தேவமாதா சர்வேசுரனுடைய தாய்; என்னுடைய தாயாகவும் இருக்கிறார்கள். நானும் அர்ச்சிஷ்டவளாக ஆக வேண்டும் என்று, தேவமாதாவிடம் விண்ணப்பிப்பேன். அதற்கு அவர்கள் உதவுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஏனெனில், கிறீஸ்துவர்களெல்லோரும் அர்ச்சிஷ்டவர்களாக வேண்டும் என்பதே, சர்வேசுரனுடைய திட்டம். அத்திட்டத்தை, செயல்படுத்துவதற்காகவே, தேவமாதா, உலகிலுள்ள சகல மனிதரையும், தமது பிள்ளைக ளாக, ஆண்டவர் சிலுவையில் மரிக்கும்போது, தத்து எடுத்துக்கொண்டார்கள். அர்ச்சிஷ்ட மரியாயே! என்ற மங்களவார்த்தை ஜெபத்தின் பிற்பகுதி மன்றாட்டை, ஜெபிக்கும் போது, பரதேசத்தின் ஏவையின் மகளாகிய, எனக்காக, இப்பொழுதும், என் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்படி, தேவமாதாவிடம் மன்றாடுவேன்.

எனவே தான், ஜெபமாலை ஜெபிக்கும்போது, நான் சர்வேசுரனுடைய தாயாருடன் பேசுகிறேன் என்பதை தியானித்து, மிகுந்த சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் ஜெபிக்கி றேன். அது ஒரு போதும், எனக்கு சலிப்பை அளிக்காத உன்னதமான ஜெபமாக இருக்கிறது. ஜெபமாலை ஜெபிக்கும் கத்தோலிக்கராகிய எங்களுக்கு, சர்வேசுரனுடைய மாதா, அளவில் லாத ஆன்ம சரீர நன்மைகளை அளித்து வருகிறார்கள். சர்வேசுரனுடைய திருமனித அவதாரத் தைப் பற்றியும், அவர் 33 ஆண்டுகள் உலகில் சஞ்சரித்ததைப் பற்றியும் தியானிக்கிறோம். அவைதான் சந்தோஷ தேவ இரகசியங்கள். அவர் பட்ட கொடிய பாடுகள், சிலுவை மரணத் தைப் பற்றியும் தியானிக்கிறேன். அவை துக்க தேவ இரகசியங்கள். நேச ஆண்டவருடைய திருப்பாடுகளைப் பற்றி, தியானிக்கும் போது, நம் பாவங்களின் மட்டில் உத்தம மனஸ்தாபம் ஏற்படுகிறது. தேவ சிநேகம் நம்மிடம் அதிகரிக்கிறது. ஆண்டவருடைய உத்தானத்தைப்பற் றியும், மோட்ச ஆரோகனத்தைப் பற்றியும், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவருடைய வருகை யைப் பற்றியும், பரலோக பூலோக இராக்கினியான தேவமாதவின் மோட்சாரோபனத்தைப் பற்றியும் தியானிப்பதே, மகிமை தேவ இரகசியங்கள். தினமும் தேவாலயத்திற்கு செல்வேன். திவ்ய நற்கருணைப்பேழையில் நமக்காக, ஆண்டவர் காத்திருக்கிறார். திவ்யபலிபூசையில் பக் தியுடன் பங்கேற்பேன். திவ்ய நன்மை வழியாக, என் இருதயத்திலும் எழுந்தருளி வரும் நேச ஆண்டவரை தகுதியுடன் வரவேற்பதற்கு, எனக்கு உதவும்படி, தேவமாதாவிடம் ஜெபிப் பேன். அவர்களும் எனக்கு உதவுவார்கள், என்று கூறி முடித்தாள்.

பெயாட்ரிஸ், பாட்டியிடம், அதிகம் படிப்பறிவு இல்லாத உங்களுக்கு இவையெல் லாம் யார் கற்பித்தது? என்று கேட்டாள். அதற்கு மர்பி பாட்டி, ஐயர்லாந்தில், பக்தியுள்ள கன்னியாஸ்திரிகளும், சங்.ஒற்றூல் சுவாமியாரும் கற்பித்தார்கள் என்றாள். தன் பதித மார்க் கத்தைச் சேர்ந்த பாதிரிமாரும், ஆயர்களும், இதுவரை, இவ்வளவு நேர்த்தியான பிரசங்கத் தைச் செய்யவில்லை என்று பெயாட்ரிஸ் உணர்ந்தாள். பெயாட்ரிஸின் குடும்பம் மனந்தி ரும்ப வேண்டுமென்று என்று, பாட்டி, ஜெபமாலை ஜெபிக்கும்போதெல்லாம் இடைவிடா மல் வேண்டிக்கொண்டிருந்தாள். ஜெபமாலையின் வல்லமையால், தேவ அனுக்கிரகத்தை அடைந்த பெயாட்ரிஸும் அவளுடைய குடும்பத்தினரும், விரைவிலேயே, புதுமையாக, சத்திய திருச்சபையில் சேர்ந்தனர். தங்களுடைய மனந்திரும்புதலுக்காக மர்பி பாட்டி, பயன் படுத்திய ஜெபமாலையை, ஓர் விலையயர்ந்த பொக்கிஷமாக, பெயாட்ரிஸ் எப்பொழுதும் தன்னுடன் வைத்திருந்தாள். தங்களுடைய மனந்திரும்புதலுக்குக் காரணமான அப்பரிசுத்த ஜெபமாலையை எல்லோரிடத்திலும் காண்பித்து, அதன் வரலாற்றை விவரிப்பாள். .

Devotion to St. Anthony (Day 25)

இருபத்தைந்தாம் நாள்

பெரார் மிலான் (Ferrare, Milan) இன்னும் பிற இடங்களில் நடந்த நிகழ்ச்சி

கொஞ்ச காலங்களுக்குள்ளாகத் தாம் இறக்க போவதை அர்ச் அந்தோனியார் ஞான திருஷ்டியால் அறிந்து அதிகமதிகமாய்ப் பிரசங்கம் செய்ய சர்வேசுரனுடைய மகிமையையும் பிறருடைய இரக்ஷண்ணியத்தையும் தேழ். அவைகளுக்காக உழைத்தார் பெரார் பட்டணத்தில் சிறிதுகாலந் தங்கி வேலை செய்தார் அவ்விடத்திலிருந்த தெல்வாதோ தேவமாதாவின் (Sancta Maria del vado ஆலயத்துக்கு அடிக்கடி சென்று மகிமை பொருந்திய ஆண்டவளே” “O Gloriosa Domina” என்னும் செபத்தைச் செய்வதில் பிரியங்கொள்ளுவார் அப்பட்டணத்திலிருந்த போதுதான் அறியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெரிய குடும்பத்துப் பெண்பிள்ளையின் மாசற்ற தனத்தைப் பாதுகாத்தார். எப்படியென்றால், துரைமகள் ஒருத்தி சமுசார வாழ்க்கையில் பிரமாணிக்கற் தப்பி நடந்ததாகத் தன் புருஷனாலேயே குற்றஞ் சாட்டப்பட்டதினால் வெகுவாய்க் துன்பப்பட்டு அர்ச்சியசிஷ்டவருடைய உதவியை மன்றாடினாள் அந்தோனியார் அவளுடைய வீட்டுக்குப் போய் அவள் புருஷனுக்கு முன்பாகவே அவன் சந்தேகப் படுவதற்குக் காரணமாயிருந்த இரண்டு மூன்று மாசத்துக் குழந்தையைத் தமது கையில் எடுத்து வைத்துக்கொண்டு, அதன் தகப்பன் யாரென்று சொல்லும்படிக்குத் திருக்குழந்தையான சேசுநாதர் நாமத்தாற் கட்டளையிடவே, அச்சிறு பாலகன் துரையைக் காண்பித்து: ‘இதோ என்னுடைய தகப்பன்’ என்று தெளிவாய்ச் சொல்லிற்று. அப்போது அந்தோனியார் தகப்பனை நோக்கி: இது உன் பிள்ளையானதால் அதன்மேற்பட்சமாயிரு, அதனுடைய தாயும் உனக்குத் துரோகம் செய்யாததால் அவள் விஷயத்திலும் மரியாதையாய் நடந்துகொள் என்று சொல்லி விட்டுப் போனார்.

அக்காலத்தில் அர்ச் பிரான்சீஸ்கு சபை அதிசிரேஷ்டர் புளோரென்சு (Florence) பட்டணத்தில் பிறந்தவரானதால் தம்முடைய சொந்த நாட்டில் அர்ச். அந்தோனியார் பிரசங்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டதின்பேரில் அந்நகருக்கு

அந்தோனியார் போய் நான்கு மாசகாலம் பிரசங்கம் செய்து வந்தார் அப்பட்டணத்திலும் சரி, வேரெந்த நாட்டிலும்சரி, அதிக வட்டி  வாங்கினவர்கள் அபரிமிதமாயிருந்ததால். அவ்வநியாயனான நடத்தையின் பேரில் அடிக்கடி பிரசங்கம் செய்து அநேகரை மனந்திருப்பினார். அப்போதுதான் அவ்விடத்திலிருந்த ஒரு பேராசை பிடித்தவன் இறந்துபோய், இவ்வுலகத்தில் ஆஸ்தி பணங்களை மிதமிஞ்சி ஆசித்த அவன் இருதயம் அவன் திரவியங்களை மறைத்து வைத்திருந்த இருப்புப் பெட்டிக்குள்ளிருக்குமென்று ஞான திருஷ்டியால் அறிந்து மற்றவர்களுக்கு அறிவித்திருந்தார். அதே பிரகாரம் அவன் மரித்த பிறகு அவன் பணப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது பணத்தின்மேல் அவன் இருதயம் துடித்துக்கொண்டு கிடக்கிறதை எல்லோருங் கண்டு அதிசயித்து அதுமுதல் அநியாய வட்டி வாங்குகிறதை வீட்டுவிட்டார்கள்,

1229ம் வருஷம் மே மாதத்தில் மிலாள் பட்டனத்தில் பிரசங்கித்து மற்ற இடங்களிலும் வேத வாக்கியத்தை அறிவிக்க வேண்டுமென்று விரைந்து போகையில் வழியிலிருந்த வெர்சேய் நகரில் தங்கித் தமது சிநேகிதரைக் கண்டு தமக்குக் கிட்டியிருக்கிற மரணத்தை அவருக்கு அறிவித்து விட்டு, வாரேஸ் என்னும் இடத்தில் ஓர் மடத்தைக் கட்டுவித்து அதில் ஒரு கிணறு எடுக்கச்செய்து அந்தக் கிணற்றின் தண்ணீணீருக்குக் காய்ச்சலைச் சௌக்கியப்படுத்தும் குணத்தைக் கொடுத்தார். அந்த உதவி தங்களுடைய பட்டணத்துக்கும் செய்யும்படி வெர்சேய் மக்கள் மிகவுங் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கும் அவ்வூர் கிணற்றின் தண்ணீரை மந்திரித்துக் கொடுத்தார்.

1230ம் வருஷத் துவக்கத்தில் சிலநாள் ஞான ஒடுக்கஞ் செய்தபிறகு, பெரெஸ்ஸியா (Brescia) பட்டணத்தில் பிரசங்கித்து, வால் தே பெரேஞா (Val de Bregna) என்ற விடத்தில் ஓர் மடத்தையும் கட்டுவித்து, அம்மடத்தில் சிறிது காலம் ஒழுங்குகளை எல்லாம் நல்லபடியாய் அநுசரித்துத் தமது சரீரத்தைக் கடின தபசினால் தண்டித்து வந்தார். அவர் படுத்திருந்த கடினமான கல்லை இன்னமும் அம்மடத்தில் வெகு பூச்சியமாய் வைத்திருக்கிறார்கள்.

கடைசியாய் மான்த்துவா (Mantua) பட்டணம் சேர்ந்து, அவ்விடத்தினின்று ரோமாபுரி போய் 9-ம் கிறகோரியுஸ் என்னும் பாப்பானவரைத் தரிசித்தபோது, அந்தப் பாப்பானவர் அவரைக் கண்டு களித்து அவரை ரோமாபுரியில்தானே திரும்பவும் நிறுத்திக் கொள்ளப் பிரயாசைப்பட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. அந்தோனியார் சிலகாலம் ஆல்வொன் (Alverne) என்னும் ஸ்தலத்தில் தியான ஏகாந்தத்திலிருந்த பிறகு தமக்கு மிகவும் பிரியமான பதுவா பட்டணம் போய்ச் சேர்ந்தார். நமது சீவிய காலத்தின் பலபல தொந்தரவு தொல்லை களில், நமது ஆத்துமத்தை நாம் மறந்துவிடாமல், எப்போதாவது தனித்து நமதாத்தும காரியங்களை யோசித்துக் கவனிக்கக்கடவோம்.

செபம்

அநேகாயிரம் பாவிகளை மனந்திருப்ப அர்ச். அந்தோனியாருக்கு வரந் தந்தருளின சர்வ வல்லபரான சர்வேசுரா, நானும் என் பாவங்களை வெறுத்து மனந்திரும்பி இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் நித்தியமாய் உம்மை நேசிக்கும்படி அர்ச். அந்தோனியாருடைய பேறுபலன்களைப் பார்த்து அடியேனுக்குக் கட்டளையிட்டருளும் – ஆமென்.

நற்கிரியை: உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகப் பூசை செய்து வைக்கிறது.

மனவல்லயச் செபம்: தியான யோகத்தில் உயர்ந்தவ ரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

உத்தரிக்கிற ஆத்துமங்களின் வணக்க மாதத்திற்கான தியானம்

திருச்சபை, துவக்கத்திலிருந்தே உத்தரிக்கிற ஆத்துமங்கள் மீது அனுதாபம் காட்டி வந்திருக்கிறது. 10ம் நூற்றாண்டில் ஜீவித்த அர்ச். ஓதிலோ என்ற ஆசீர்வாதப்பர்சபை அதிபர், உத்தரிக்கிறஸ்தல ஆத்துமங்களின் வேதனையைப்பற்றி ஓர்பரிசுத்த தபோதனர் கண்ட காட்சி யைப் பற்றி கேள்விப்பட்டார். உடனே, அதிபர், தம் சபை மடங்களிலெல்லாம், சகல அர்ச்சிஷ்டவர்களின் திருநாளை அடுத்துவரும் நாளில், இறந்த சகல விசுவாசிகளின் இளைப்பாற்றிக்காக, மாலை ஆராதனை ஜெபங்களும் (vespers), காலை ஆராதனை ஜெபங்களும் (matins), திவ்ய பலிபூசையும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டார். குளூனி நகரில் எழுதப்பட்ட இவ்வுத்தரவு இன்னும் பத்திரமாய்ப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கு மிகவும் பயனுள்ளதும், ஏற்புடையதுமான இப்பக்தி முயற்சி நாள் டைவில் முழுவதும், உலகெங்கிலும் பரவியது.

உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக அன்றைய தினம், ஒவ்வொரு குருவும் மூன்று திவ்ய பலிபூசை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கும் திருச்சபை, விசுவாசிகள் அன்று, தாங்கள் காணும் திவ்ய பலிபூசை, உட்கொள்ளும் திவ்ய நன்மை, ஜெபங்கள், தர்மங்கள் சகலத்தையும் இறந்தோருக்காக ஒப்புக்கொடுக்கும்படி, அவற்றிற்கான பல்வேறு வகையான ஞானப்பலன் களைக் கொடுத்துத் துாண்டுகிறது. உத்தரிக்கிற ஆத்துமங்கள், தங்களுக்குத் தாங்களே உதவ முடியாது. ஆதலால், யுத்த சபையிலிருக்கும் சகோதரரான நம்மிடம், அவர்கள், உதவி கேட் கின்றனர். கொடிய வேதனைகளிலிருந்து, தங்களை விடுவிக்கும்படி திவ்யபலிபூசைகள், ஒப் புக்கொடுக்கப்படும்படி ஆசிக்கின்றனர்.

to read more Christian stories https://tamilcatholicprayers.blogspot.com/p/blog-page_15.html

அர்ச். பிரான்ஸ் அசிசியாரின் சீடரான சகோ.ஜியோவான்னி, ஒருமுறை, உத்தரிக்கிற ஆத்துமங்கள் திருநாளன்று, பக்திபற்றுதலுடன் திவ்ய பலி பூசை நிறைவேற்றிய போது, நித்திய பிதாவே! உமது திவ்யகுமாரனின் திருமுகத்தைப்பார்த்து, உத்தரிக்கிற சிறையிலிருக் கும் ஆத்துமங்களை விடுவித்தருளும் என்று ஜெபித்தார். அப்போது, எண்ணமுடியாத திரளான ஆத்துமங்கள் உத்தரிக்கிறஸ்தலத்திலிருந்து வெளியேறி, மிகுந்த பிரகாசத்துடன் மோட்சத் திற்கு செல்வதைக் கண்டார். ஒருசமயம், உத்தரிக்கிற சிறையிலிருந்து விடுபட்ட அர்ச். பெர் நார்துவின் மடத்தைச் சேர்ந்த சந்நியாசி, வயோதிபரான ஒரு சந்நியாசியார் முன்பாகத் தோன்றி, திவ்ய பலிபூசை நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு பீடத்தைச் சுட்டிக் காண்பித்து, என் சங்கிலிகளை அறுத்தெறிந்த பெரிய வல்லமை அதுவே! என் மீட்பின் கிரயம் அதுவே! என் பாவக்கறைகளை அகற்றியது, தேவபலிப்பொருளே! என்றார். திவ்ய பலிபூசையே, ஜீவிய ரும் மரித்தோரும் பயனடைவதற்கான தேவவரப்பிரசாதத்தின் வற்றாத ஊற்று! திவ்ய பலி பூசை அளிக்கும் அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களிலும், பேறுபலன்களிலும், உத்தரிக் கும் சிறையில் அவதியுறும் நமது பெற்றோர் உற்றார் நேசரும் பயனடையும்படியாக, நாம் தினமும் ஜெபிப்போம்!

மகா பரிசுத்த ஜெபமாலையின் மகிமை

அநேக வருடங்களுக்கு முன், அயர்லாந்து நாட்டினர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் மேற்றிராணியாராக இருந்தார். அவர் ஒரு சமயம், ஓய்விற்காக தமது சொந்த நாடான அயர்லாந்து சென்றிருக்கையில், சில நண்பர்களுடன் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தார். அப்பொ ழுது, அவர் தம்முடைய ஜெபமாலையைக் காண்பித்தார். அது வெகு சாதாரணமானது. குறைந்த விலையுள்ளது. வெள்ளை மணிகள். ஆயிரம்பவுன் கொடுத்தாலும், இந்த ஜெபமாலை யை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன். இதைப் பற்றிய வரலாறு ஒன்றுண்டு” என்றார். யாவரும் அதைக் கேட்க விரும்பினர். அவரும் அந்த வலாற்றைப் பின்வருமாறு கூறினார்: “அநேக ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அதோடு கொடிய கொள்ளை நோயும் சேர்ந்து, அநேக உயிர்களைக் கொண்டு சென்றது. அதே சமயம், அந்நியரான ஆங்கிலேயர் அயர்லாந்தின் கத்தோலிக்க மக்களை இம்சித்து கொடுமைப் படுத்தி வந்தனர். இந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் நம் நாட்டினரை வரவேற்றன.

நாட்டைவிட்டுச் செல்பவர்கள் புறப்படுமுன் உத்தரிய சுரூபம், ஜெபமாலை முதலிய பக்திக்கடுத்த பொருட்களை இங்குள்ள கன்னியாஸ்திரி மடங்களிலிருந்து வாங்கிச் செல்வார் கள். ஒருநாள் கப்பலொன்று அயர்லாந்தைவிட்டு ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டது.

கத்தோலிக்கன் ஒருவனும் அதே கப்பலில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றான். அவன் சில பக்தியற்ற மனிதர்களுடன் சேர்ந்து பழகுவதை வயோதிபர் கவனித்தார். அவர்களுடன் ஆடல் பாடல் களுக்கு அவன் சென்றான். எப்போதும், அவன், அவர்களோடே பேசிக் கொண்டிருப்பான். ஆஸ்திரேலியாவில் சேர்ந்ததும், அவர்களே, அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார்கள். ஆனால் அவன் தன் வேதாப்பியாசத்தை விட்டுவிட வேண்டுமென வற்புறுத்தினார்கள். அதா வது கத்தோலிக்க வேத விசுவாசத்தைகைவிடும்படி அவனிடம் வற்புறுத்தினர். அதற்கு அவ னும் சம்மதித்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் கிழவனார், அவனை தேவாலயத்தில் தேடிப் பார்த்தார். அவனைக் காணோம்.

ஆண்டுகள் கடந்தன. வாலிபன், ஆஸ்திரேலியாவில் பெரிய பணக்காரனாக உயர்ந் தான். நகரின் முக்கியமான தெருவிலிருந்த ஒரு கடையின் சொந்தக்காரன் அவன். சொத்துக் களும் ஏராளமாக வாங்கினான். அவன் கத்தோலிக்கன் என்பதை அந்த வயோதிபரைத் தவிர வேறெவரும் அறியார். புரோட்டஸ்டான்டு பதித சபையைச் சேர்ந்த ஒருத்தியை அவன் திருமணம் செய்துகொண்டான். அவள் பிரியம் போல், தன் பிள்ளைகளை பதித மார்க்கத்திலே யே வளர்க்க விட்டுவிட்டான். இறுதியாக அவனுக்கு நோய் வந்தது. ஒருநாள் அந்த வயோ திபர் பணக்காரனது வீட்டுப்பக்கமாய் சென்றார். பலர் வீட்டுக்குள் போவதும் வருவதுமாய் இருந்தனர். காரணத்தை விசாரித்தார். பணக்காரனுக்கு சுகமில்லை. வைத்தியர்கள் யாவரும் கைவிட்டார்கள் என்று அறிந்தார். அவனுடைய ஆத்துமத்தை எப்படியாவது காப்பாற்றத் தீர்மானித்து, அவன் வீட்டிற்குள் நுழைந்தார். நோயாளி படுத்திருந்த அறைக்குச் சென்று, அவனருகில் முழந்தாளிட்டார்.

அவனுக்காக ஜெபமாலை சொல்லி ஒப்புக் கொடுத்தார். பின், தான் யாரென்று முத லில் தெரிவித்து, “உன் தாயும் தந்தையும் உன்னை நல்ல கத்தோலிக்கனாக வளர்த்தார்களே! நீ இந்த நிலையில் செத்தால், உன் ஆத்துமத்தை, நித்தியத்திற்கும் இழந்துவிடுவாயே! உன் அம் மாவிற்கும் அப்பாவிற்கும், அது எவ்வளவு வேதனையைத் தரும் என்று சிந்தித்துப் பார்த்தா யா? கத்தோலிக்க குருவானவர் ஒருவரை, அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார். இதைக் கேட்டவுடன், அவன் உணர்ச்சி பெருக்கத்துடன் சப்தமிட்டு அழுதான். உலக செல்வத்திற் காக, விலை உயர்ந்ததும், நித்திய பேரின்ப மோட்ச பாக்கியத்தை அளிக்க வல்லதுமான கத் தோலிக்க வேதவிசுவாசத்தைக் கைவிட்டதையும், வேதகடமைகளை அனுசரியாமல் இருந்த தையும் நினைத்து அழுதான். பின்னர், அவன் வயோதிபரிடம், ” ஐயா! மிக்க நன்றி, நல்லது விரைவில் கூட்டி வாருங்கள்” என கூறினான்.

உடனே வயோதிபர், பங்கு சுவாமியாரைத் தேடிச் சென்றார். அங்கே பங்கு சுவாமி யாரும் மற்ற குருக்களும் வெளியே சென்றிருந்தார்கள். அவர் கொண்ட கவலையைக் கவ னித்த வேலைக்காரன், “ஐயா, அதிக அவசரம் என்றால் மேற்றிராணியாரை அழைத்து வருகி றேன்” என்றான். சிறிது நேரத்தில் மேற்றிராணியாருடன் வந்தான். விஷயத்தைச் சொல்லி, “விரைவில் வாருங்கள், ஆண்டவரே! நோயாளிசாகுமுன் போய்ச் சேர வேண்டும்” என்று வயோதிபர் வற்புறுத்தினார். ஆனால், மேற்றிராணியார், அதற்கு ஓர் நிபந்தனையைக் கூறினார்: “ஒரு புரோட்டஸ்டான்டு பாதிரியாரும், ஒரு போலீஸ் அதிகாரியும் என்னுடன் கூட வர வேண்டும். அழைத்து வந்தால், உடனே போகலாம்” என்று சொல்லிவிட்டார். அவனுடைய ஆத்துமத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று தீர்மானித்திருந்த வயோதிபர் சிரமத்தை கவனியாமல், பல இடங்களுக்கு சென்று பேசி, மேற்றிராணியார் கேட்ட

இருவரையும் அழைத்து வந்தார்.

நால்வருமாகப் புறப்பட்டார்கள். மேற்றிராணியார் எதிர்பார்த்தபடியே, நோயா ளியின் வீட்டினுள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. அதாவது, பதித புராட்டஸ்டான்டு மார்க்கத்தில் உட்பட்டிருந்த பணக்காரனுடைய ஆத்துமத்தை, பசாசு அவ்வளவு எளிதாக கத்தோலிக்க மேற்றிராணியாரிடம் விட்டுவிட மனமில்லாமல், புராட்டஸ்டான்டு பதிதரை, அவருக்கு எதிராக குழப்பம் செய்யும்படி துாண்டியது. உடனே, மேற்றிராணியார், அருகி லிருந்த போலீஸ் அதிகாரியைப் பார்த்து, “ஐயா, இந்த வீட்டின் சொந்தக்காரன், என்னைக் கண்டு பேச விரும்புகிறான். இதோ இங்கு நிற்பவர்கள் என்னைத் தடுக்கின்றனர். நீர் உமது கடமையை நிறைவேற்றும்” என்றார். போலீஸ் பாதுகாப்போடு , மேற்றிராணியார், இருவரு டனும், வீட்டிற்குள் நுழைந்தார். நோயாளியிடம் சென்று, “நண்பா, இவர் ஒரு புரோட் டஸ்டான்டு மத குரு. நான் கத்தோலிக்க மேற்றிராணியார். எங்கள் இருவரில், நீ மோட்சம் செல்வதற்கு, யாருடைய உதவி உனக்கு வேண்டும்?” என்று வினவினார். “ஆண்டவரே! நீங் கள் தான் வேண்டும், நீங்கள் தான் வேண்டும்” என்று சாகக் கிடந்தவன் பதறிச் சொன்னான். “நண்பர்களே, நோயாளி சொன்னதைக் கேட்டீர்களல்லவா? எல்லோரும் சற்று வெளியே போங்கள். நான் இவனுடன் தனியே பேச வேண்டும்” என மேற்றிராணியார் அங்குக் கூடி யிருந்தவர்களிடத்தில் கூறினார். உடனே அங்கிருந்த சகலரும் வெளியேறினர். பல ஆண்டு களாக திவ்ய கத்தோலிக்க வேதத்தை அனுசரியாமல், சர்வேசுரனை மறந்திருந்த பாவி அன்று, உத்தம மனஸ்தாபத்துடன் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, கடவுளுடன் சமாதான மானான். அவஸ்தை பூசுதல் பெற்றுக் கொண்டான்.

எல்லாம் முடிந்ததும், தம்பி, இத்தனை காலமாக நீ நேச ஆண்டவரை விட்டு அகன்று திரிந்து, கடைசியாக அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறாய். இது உனக்கு மிகப் பெரிய பாக்கி யமே! நீ , நம் நேச இரட்சகரை மறந்தாலும், அவர் உன்னை மறவாமல் தம்மிடம் திரும்ப சேர்த்துக் கொண்டார். அதற்கு, இதோ இந்த வயோதிபரும், பெரிதும் உதவியிருக்கிறார். அவ ருக்கு நீயும், நானும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆத்தும் தாகம் கொண்ட ஒவ்வொரு கத்தோலிக்கரும், இத்தகைய பிறர் சிநேகத்துடன் ஜீவித்தால், எவ்வளவு சிதறிப் போகும் ஆத்துமங்களைக் காப்பற்றலாம்! இந்த வரத்தைப் பெறுவதற்கு, உன் வாழ்நாளில் நீ ஏதாவது நன்மை செய்திருக்க வேண்டும். அது என்ன?” என்று மேற்றிராணியார் கேட் டார். நோயாளி தன் தலையணையின் கீழ் சற்று நேரம், தேடினான். ஒரு ஜெபமாலை அங்கிருந் தது. அதை எடுத்துக் காண்பித்து,” சுவாமி, நான் பெரிய துஷ்டன்; பெரிய பாவி! நன்மை ஒன் றும் நான் செய்ததில்லை. நான் அயர்லாந்திலிருந்து புறப்படுவதற்குமுன், ஒருகன்னியாஸ்திரி, இதை எனக்குக் கொடுத்து, இந்த ஜெபமாலையைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் ஒரு மங்களவார்த்தை ஜெபமாவது சொல்வதாக வாக்களிக்கும்படி என்னிடம் கேட்டார்கள். நானும், அவ்விதமே, வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியில், இது வரை, நான் தவறா மல் நடந்திருக்கிறேன். இதைத் தவிர, வேறு நல்லது எதுவும் நான் செய்ததில்லை” என்று கூறி னான். அந்த ஜெபமாலையைத் தமக்குத் தரும்படி மேற்றிராணியார், அவனிடம் கேட்டார். தன் மரணத்துக்குப் பின் அவர் அதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்று, கூறிய படி அவன், தனக்கு மோட்சத்தை பெற்றுத்தரப்போகும் அத்திருப் பண்டத்தை பக்தியோடு முத்திசெய்து, ஆசையோடு கைகளில் இறுகப் பற்றிக்கொண்டு, மங்கள வார்த்தை ஜெபத் தை, கண்களில் நீர்மல்க ஜெபித்தான். அப்போது, அவன் உயிர் பிரிந்தது. அந்த ஜெபமாலை யை எடுத்துவந்த மேற்றிராணியார், அதைப் பெருந்திரவியமாகக் கருதி வந்தார். சாகுமுன், அவருக்குப்பின், அதே மேற்றிராசனத்தின் மேற்றிராணியாராக பதவி ஏற்க வந்த எனக்கு இதைக் கொடுத்துச் சென்றார்” என்று கதையை முடித்தார். 1

மகா பரிசுத்த ஜெபமாலை இராக்கினியே! வாழ்க!

அர்ச். அமலோற்பவ மாமரியே! வாழ்க!

யூதித் பாட்டியின் தேவசிநேகம்

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஏழை வயோதிபர்களுக் கென்று கட்டப்பட்டிருந்த விடுதியிலிருந்த தேவாலயத்தின் பீடத்திலிருந்த வாடா விளக்கு, மங்கலாய் எரிந்து, அன்புக் கைதியாக திவ்யசற்பிரசாதப்பேழையில் எழுந்தருளியி ருக்கும் சர்வாதி கர்த்தருக்குக் காவல் புரிந்து கொண்டிருந்தது. இருள் பரவியிருந்த அந்நே ரத்தில் அங்கு வேறு வெளிச்சமே இல்லை. புதிதாக அன்று அங்கு வந்திருந்த சங். இஸபெல் கன்னியாஸ்திரி அமைதியாக கோவிலுக்குள் வந்து, முழங்காலிலிருந்து, சில வினாடி ஜெபித் தார்கள். தனியே இருப்பதாக நினைத்த இஸபேல் சகோதரியின் கண்கள், இருளுக்குப் பழகிய பின்னரே, வேறு ஓர் ஆளும் அங்கிருப்பதாக உணர்ந்தது. பீடத்தின் அருகில் ஓர் மூலையில் அந்த உருவம் குனிந்திருந்தது. அவள் கிழவி. முழந்தாளிட்டிருந்தாள். இரவு படுக்கும் நேரத் திற்கான மணியடித்தவுடன், மெதுவாகவும் சிரமத்துடனும் எழுந்து, தன் நேச ஆண்டவர் குடியிருக்கும் தேவநற்கருணைப் பேழையை கடைசி முறையாக அன்புடன் நோக்கிவிட்டு, அமைதியாக கோவிலை விட்டு வெளியேறினாள்.

இஸபெல் கன்னியாஸ்திரி அநேக ஆண்டுகளாக பல்வேறு மடங்களிலிருந்து ஏழை வயோதிபர்களைப் பராமரித்து வந்தவர்கள்; திவ்ய நற்கருணைப் பேழைக்குமுன் நெடுநேரம் செலவழித்த பல பக்தியுள்ள வயோதிகர்களை அறிவார்கள். புது இடத்துக்கு வந்த நாளிலி

ருந்து, அந்த கிழவிமேல் அவர்களுக்கிருந்த மதிப்பு அதிகரித்தது. கிழவி அநேகமாய் எப்போ தும் தேவாலயத்திலேயே இருந்தாள். மறைந்திருந்த தன் கடவுளை, இரட்சகரை, சந்திக்கும் படி, இரவிலும் பகலிலும் இடையிடையே இஸபெல் சகோதரி கோவிலுக்குப் போவார்கள். அந்த சமயங்களிலெல்லாம் கிழவி கோவிலில் இருப்பாள். நாளடைவில், சகோதரி கோவி லுக்கு வந்ததும், முதலில் திவ்யற்கருணைப் பேழையை நோக்கி ஆராதித்து விட்டு, கிழவி முழங்காலிலிருந்து ஜெபிக்கும் வழக்கமான இடத்தையே நோக்குவார்கள். கிழவியின் கண் கள் , மகாப் பரிசுத்த பேழையின்கதவின் மேல் இருக்கும். கையில் ஜெபமாலையப் பிடித்து, ஜெபித்துக் கொண்டிருப்பாள்.

அந்தக் கிழவி யாரென சங். இஸபெல் ஒருநாள் விசாரித்தார்கள். அவளுடைய பெயர் யூதித் மர்பி. அவளுடைய கணவனும் மூன்று மக்களும் ஆறு ஆண்டுகளுக்குமுன் காய்ச் சல் கண்டு இறந்தார்கள். அதிலிருந்து அவள் இங்கு வந்து வசிக்கிறாள். வெகு பக்தியுள்ளவள், என்று சங். ரோஸ் கன்னியாஸ்திரி மொழிந்தார்கள். சகோதரி நான் அந்த பாட்டியுடன் பேச ஆசிக்கிறேன். சேசுவின் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் அவள் தலை குனிகிறாள். அதிலிருந்து, அவள் ஜெபமாலையை வெகு விரைவாகச் சொல்கிறாள் என்று நினைக்கிறேன். அவ்வளவு விரைவாகச் சொல்லக் கூடாது. இதைப் பற்றி பாட்டியிடம் நான் சொல்லப் போகிறேன். என இஸபெல் கூறியதும், சொல்லுங்கள், அவளைப் போல் ஜெபிக்கும் வரத்தை உங்களுக்குத் தரும்படி ஆண்டவரை மன்றாடுங்கள், என ரோஸ் சகோதரி சொல்லிச் சென்றார்கள்.

மறுநாள் இஸபெல் சகோதரி, கிழவியை அணுகி, பாட்டி கோவிலில் எப்பொழுதும் ஜெபமாலையா சொல்கிறீர்கள்? என்றாள். அதற்கு, அவள் ஒன்றும் பதிலளிக்கவில்லை. தலையை வெறுமனே அசைத்தாள். அருள் நிறை மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறீர்களா? என்று கேட்டபோது, இல்லை என்று காட்ட அவள் தன் தலையை அசைத்தாளேயொழிய, வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை. தான் பேசுவது அவளுக்குப் பிரியமில்லை என நினைத்து, கன்னியாஸ்திரி, அங்கிருந்து போகையில், தயவு செய்து எனக்காகவும் ஜெபியுங்கள் என்று சொல்லிச் சென்றாள். காலையிலிருந்து இரவு வரை, யாதொரு உதவியும் இன்றி, முழந்தாளிட் டிருப்பது எளிதல்ல. நான் ஒரு மணிநேரம் முழந்தாளிட்டிருந்தால் உடலெல்லாம் நோகிறது. கிழவியோ பல மணி நேரமாக அசையாமல் பார்வையை, வேறெங்கும் திருப்பாமல், முழங் காலிலிருந்து ஜெபிக்கிறாளே, என இஸபெல் சகோதரி வியப்புற்றார்கள். யூதித், அது தான் கிழவியின் பெயர். யூதித் பாட்டி, இராப்பகலாய் தன் நேச சேசுவிடம் என்ன பேசுவார்கள் என்று இஸபெல் கன்னியாஸ்திரி சிந்தித்துப் பார்த்தார்கள். ஒரு நாள் இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்தது.

திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்துக்கு முன் சங்.இஸபெல், தேவாலயத்திற்குள் போன போது, கிழவி பேசினது என்ன என்று அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அவள் வழக்கமாக முழந்தாளிடும் இடத்திற்கு அருகில் இருந்த திரைக்குப்பின், கன்னியாஸ் திரி போய் முழந்தாளிட்டார்கள். சில நிமிடங்களுக்குப் பின் யூதித் பாட்டி வந்தார்கள். தான் மாத்திரம் கோவிலில் தனியே இருப்பதாக, நினைத்துக் கொண்டு, முழங்காலிலிருந்து, தரையை முத்தமிட்டு ,”திவ்ய சேசுவே! இதோ நான் திரும்பவும் வந்து விட்டேன்” என்றாள். பிறகு வழக்கமான தன் ஆராதனை கீதத்தை ஆரம்பித்து, “ஓ! நேச சேசுவே! கோடான கோடி வாழ்த்துதல் உமக்கு உண்டாகக் கடவது’ என்னும் ஜெபத்தை பத்து முறை, ஐம்பது முறை நூறு முறை சொல்லி தன் ஜெபமாலை மணிகளை உருட்டி ஜெபித்தார்கள். யாராவது கோவிலினுள் நுழைந்தால், தனது குரலைத்தாழத்திக் கொள்வார்கள். தனியே விடப்பட்டி ருப்பதாக உணர்ந்ததும், சிறிது சத்தமாய் சொல்வார்கள். திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் முடிந்த பின்னும் யூதித் பாட்டி அங்கிருந்தார்கள். படுக்கைக்குச் செல்ல வேண்டிய நேரமா யிற்று என்று அறிவிக்கும் மணியடித்ததும், அவள் எழுந்து திவ்ய நற்கருணைப் பெட்டியை அன்புடன் நோக்கி,”சேசுவே, என் கண்மணியே, நான் போய் வருகிறேன். மல்லமோன் ஊரி னளான யூதித் மர்பி கிழவியை மறந்து போகாதேயும். சேசுவே! இரவு வந்தனம். அதிகாலை யில் உம்மிடம் திரும்ப வருவேன்” என்றனள். பின் மெதுவாக கதவை நோக்கி, ” சேசுவே, இன்னொரு முறை, பெரிய மாலை வணக்கம்” என்று மொழிந்தாள்.

இஸபெல் சகோதரி கடைசியாக, உண்மையை அறிந்தார்கள். கிழவி திவ்ய சேசுவை நேசித்தாள். சேசுநாதர் சுவாமி, பீடத்தில் மறைந்து வசித்த போதிலும், தன் கண்முன் அவர் உயிருடன் ஜீவிப்பதாக, அவள் முழு இருதயத்துடன் விசுவசித்து, அதன்படி நடந்தாள் என்பதை சங். இஸபெல் கன்னியாஸ்திரி அறிந்தனள். மாதங்கள் பல கடந்தன. ஓரிரவு படுக்கைக்கு சகலரையும் அழைக்கும் மணி அடித்தாயிற்று. யூதித் பாட்டி, படுக்கைய றைக்குச் செல்லவில்லை. கோவிலுக்கு எல்லோரும் விரைந்தனர். அவள், ஒரு மூலையில் சுருட்டி மடக்கி அறிவின்றிக் கிடந்தாள். சேசு அவளைத் தம்மிடம் அழைத்துக் கொண்டார் என்று எல்லோரும் கருதினார்கள். அவளைத் தரையிலிருந்து எழுப்புகையில், இன்னும் உயிர் இருந்தது. மருத்துவமனைக்கு அவளைத் தூக்கிச் சென்றனர். சுயநினைவு வந்தது. தான் பிரமா ணிக்கமாய் நேசித்து வந்த தன் நேச ஆண்டவரை, திவ்ய சேசுவை, கடைசி முறையாக, பரலோக பயணத்தின் வழித்துணையாக உட்கொண்டாள். அவள் நோய்வாய்ப் படுத்திருக் கையிலும் ஒரேஜெபம்:”ஓ! நேசசேசுவே! உமக்குக் கோடான கோடி வாழ்த்துதல். மல்ல மோன் ஊரினளான யூதித் மர்பி கிழவியை மறந்துவிடாதேயும். திவ்ய சேசுவே! கண்மணி யே! போய் வருகிறேன். அதிகாலையில் உம்மிடம் திரும்பி வருவேன்” என ஓயாது சொல் லிக் கொண்டிருந்தாள். ஆம், அவள் சொன்னது போல், அதிகாலையில் அவள், அவரிடம் திரும்பிச் சென்றனள். மோட்சத்திலிருக்கும் சகல பரிசுத்தவான்களுடன் சேர்ந்து, நித்தியத் திற்கும் அவரை வாழ்த்தும்படி மறுநாள் அதிகாலையில் அவளது ஆத்துமம், தனது ஏக நேச ரை நோக்கி பறந்து சென்றது..

https://tamilcatholicprayers.blogspot.com/

பதிதப் பெண், சத்திய வேதத்தில் சேர்ந்த புதுமை

பல வருடங்களுக்கு முன்பு, அமெரிக்க ஐக்கியநாட்டில், மார்த்தா என்ற ஓர் புராட்டஸ்டன்டு சிறுமி இருந்தாள். அவளுடைய தந்தை ஒரு பதித சபையின் பாதிரியாராக இருந் தார். சிறுமி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பாள். தந்தைக்கு எப்பொழுதும் அவள் மீது பிரியம். ஒருநாள் தெருவின் கடைசியிலிருந்து தன் தந்தை ஒரு அந்நியருடன் நடந்து வருவ தைக் கண்டாள். உடனே, தந்தையிடம் ஓ டினாள். அவர் தன்னுடன் வந்த அந்நியரிடம், “இவள் என் மகள் மார்த்தா ” என்றார். மகளிடம்,” இவர் சங். வால்ஷ் சுவாமியார். ஒரு கத்தோ லிக்க குருவானவர்” என்று கூறி அந்நியரை அறிமுகம் செய்தார். குருவின் கையைகுலுக்கிக் கொண்டே, மார்த்தா, அவருடைய முகத்தை, இமை மூடாமல், பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளுடைய உடல் சிலிர்த்தது. முகத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் ஒன்றும் பேசவில்லை. குருவானவர் கறுப்பு அங்கி அணிந்திருந்தார். உயரமான உருவம். அவருடைய கனிவான பார்வை, சிறுமியின், இருதயத்தை ஊடுருவியது. தலைகுனிந்து அவருக்கு அவள் வணக்கம் செலுத்தினாள். அவருடைய தோற்றம் சிறுமியின் மனதை விட்டு அகலவில்லை.

குருவானவரை, பதித பாதிரியார், தன்னுடைய பதிதத்தைத்தழுவியிருந்த மக்களிடம் அழைத்துச் சென்றார். அவர்களிடம், “இவர் ஒரு கத்தோலிக்ககுரு. அபூர்வ வல்லமையுள்ள வர்” என்று அறிமுகப்படுத்தினார். சங். வால்ஷ் சுவாமியார் எழுந்து நின்று, கூடியிருந்த மக் களிடம், அந்நகர்ப்புறத்திலுள்ள கத்தோலிக்கருக்கு அவசியமான ஞானக்காரியங்களை கவனித்து, அவர்களை, ஞானஜீவியத்தில் போஷிக்கும்படியாக, தாம் அங்கு அனுப்பப்பட்ட தாகக் கூறினார். மேலும், கத்தோலிக்க திருச்சபை கற்பாறையின் மேல் கட்டப்பட்டது பற்றியும், உலகின் சகல மக்கள் மீதும் அதற்குள்ள உரிமை பற்றியும் விரிவாக பிரசங்கித்தார்; ஒவ்

வொருவருடைய அழியாத ஆத்துமத்தையும் மோட்ச கரை சேர்ப்பது, ஞான மேய்ப்பர் களான குருவானர்களுடைய தலைமையான கடமை என்றும் விவரமாக எடுத்துரைத்தார்.

சிறுமிகளுக்கென குறிக்கப்பட்ட இடத்தில் மார்த்தா அமர்ந்தபடி, குருவையே விடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் நன்றி கூறி, அவர் விடைபெற்றுச் செல்கை யிலும், மார்த்தா தன் பார்வையைத் திருப்பவில்லை. குருவானவரும், சிறுமியை ஆசீர்வதித்து விட்டுச் சென்றார். அந்நிமிடத்திலிருந்துமார்த்தாளின் இருதயம் கத்தோலிக்க திருச்சபையை நாடியது. ஆனால், புதிதாக அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அவ்வளவு கவனமாக, அவளுடைய பெற்றோர் கவனித்துவந்தனர். புத்தகம் வாசிப்பதில் அவளுக்கு அதிக ஆவல் இருந்தது. கத்தோலிக்க வேத சத்தியங்கள் பற்றிய புத்தகம் எதுவும், அவளுடைய கண்ணில் படாதபடி, பார்த்துக் கொண்டனர். இருப்பினும், அவர்கள் வீட்டிற்கு அருகிலுள்ள அர்ச். மரிய மதலேனம்மாள் தேவாலயத்திற்கு, மார்த்தா தன் பெற்றோருக்குத் தெரியாமல் செல்வ தை வழக்கமாகக் கொண்டிருந்தாள். தனது பதித கோவிலில் மக்கள் எப்பொழுதும் பேசிக் கொண்டும், யாதொரு பக்தியும், ஆச்சாரமும் இன்றி, நடந்துகொள்வதையே இதுவரை பார்த்து வந்தமார்த்தாள், இந்த கத்தோலிக்க தேவாலயத்தில், எப்பொழுதும் மௌனம் அனுசரித்து, பீடத்தின் மத்தியில் இருக்கும் பரிசுத்த பேழையை மக்கள் மிகுந்த பக்திபற்றுத லுடன் உற்று நோக்கி ஜெபிப்பதையும், தாழ்ந்து பணிந்து ஆராதிப்பதையும், ஆச்சரியத்து டன் கவனித்தாள். கத்தோலிக்க தேவாலயங்களில் நிலவிய அமைதியும் பக்திமிகுந்த சூழ லும், அங்கு செல்லும்படி அவளைக் கவர்ந்திழுத்தது. தினமும்மாலையில் நடைபெறும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்திற்குச் செல்வாள். ஒரு மூலையில் ஒளிந்து இருந்து, மாபெரும் வசீகர எழிலுடனும் ஆடம்பரமான ஒளியுடனும் தேவாலயத்தின் பீடத்தின் மீது ஸ்தாபிக்கப்பட்டி ருக்கும் திவ்ய சற்பிரசாத நாதரையே, மார்த்தா மிக ஆச்சரியத்துடன் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பாள். தங்கள் நேச ஆண்டவரை, எப்பொழுதும் இடைவிடாமல் ஆராதித்துக் கொண்டிருப்பதையே, நித்திய பேரின்பமாகக் கொண்டிருக்கும் மோட்சவாசிகளான சம் மனசுகளுடனும் அர்ச்சிஷ்டவர்களுடனும் சேர்ந்து, பூலோகவாசிகளும் திவ்ய சற்பிரசாத நாதரை ஆராதித்துக்கொண்டிருந்தனர்.

திவ்ய சற்பிரசாத நாதர், தன் இருதயத்தைக் கவர்ந்து விட்டதை, அப்பொழுது, அவள் உணர்ந்தாள். “பீடத்தின் மீது எழுந்தருளியிருப்பது, கடவுள் தான் என்று என் இருத யம் எனக்கு உணர்த்துகிறது. அதனால் தான், கத்தோலிக்கர்கள், தேவாலயப்பீடங்களில் எழுந் தருளியிருக்கும் தங்களுடைய திவ்ய கர்த்தரும் ஆத்தும் சிநேகிதருமான திவ்ய சேசுவுடன் சல்லாபிக்கும்படியாக, அடிக்கடி “தேவநற்கருணை சந்திப்பு” செய்து, அபரிமிதமான தேவ வரப்பிரசாங்களைப் பெற்றுச் செல்கின்றனர். அதன்வழியாக ஞான ஜீவியத்தின் உத்தமதனத் தை அவர்கள் எளிதில் அடைந்து கொள்கின்றனர். அவரைப் பற்றி, இன்னும் அதிகமாய் அறி வதற்கு ஆசிக்கிறேன்” என்று தனக்குள் சொல்வாள். ஆனால், எவ்விதம் ஆண்டவரை அறிவது? அதைப் பற்றி வெளியில் யாருடனும் பேச முடியாது. வழக்கம்போல் மற்றவருடன் பதித கோவிலுக்குச் செல்வாள். ஆனால், பதித வேதாகமத்தையே வழிபாட்டின் மையப்பொரு ளாகக் கொண்டதும், பக்தியற்றதும் அமைதியற்றதுமான அச்சூழலில், அவளால் ஜெபிக்க முடியவில்லை. அவளது இருதயமோ, கத்தோலிக்கு தேவாலயத்தையே நாடியது. ஆண்டுகள் பல கடந்தன. பிறருக்குத் தெரியாமலேயே, மார்த்தா கத்தோலிக்கு தேவாலயங்களுக்கு சென்று கொண்டிருந்தாள். “பரலோக பிதாவே! என்னை சத்திய வேதத்திற்குள் கொண்டு சேர்த்தருளும்” என்று அடிக்கடி ஜெபிப்பாள்.

மார்த்தாளுக்குத் திருமணம் முடிந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களில், கணவன் இறந்தான். இந்த சமயத்தில் அவள் கத்தோலிக்க வேதத்தில் சேர்வதற்கு, மிகவும் ஆசித்தாள். ஆனால், அதில் சேர்வதற்கு உதவுபவர்களை அவள் சந்திக்கவில்லை. ஒருநாள் அவள் தன் பிள்ளைகளுடன் நடந்து செல்கையில், அல்லெமனிநகரின் அதிமேற்றிராணியாரைப் பார்த்தாள். அவரைப் பார்த்தடன், அவளுக்கு, சங்.வால்ஷ் சுவாமி யாரின் ஞாபகம் வந்தது. நின்று அவரையே உற்றுப் பார்த்தாள். அதி மேற்றிராணியாரும் அவள் அருகில் வந்ததும் நின்று, அம்மா நான் உனக்கு செய்யக்கூடியது ஏதாவது உண்டா ? என்று கேட்டார். அதற்கு அவள், உணர்ச்சிவசப்பட்டவளாக எதுவும் பேசமுடியாமல், நான்

புராட்டஸ்டன்டு மதத்தவள் என்று மட்டுமே கூறினாள். அதைக் கேட்ட நல்ல ஞான மேய்ப் பர், புன்னகை புரிந்தவராக, அவளையும் அவளுடைய பிள்ளைகளையும் ஆசீர்வதித்து விட்டுச் சென்றார். அந்நேரமுதல், அவளிடம் புத்துணர்ச்சி ஏற்பட்டது. என்றுமில்லாதவிதமாக, தன் பால் ஈர்த்து வந்த கத்தோலிக்க திருச்சபையின் வேதவிசுவாச சத்தியத்திற்கு எதிராக, பதித சபையினர், அனேக தப்பறைகளைப் பரப்பி வந்ததையும் அவள் கேட்டாள். அவற்றை சட் டைபண்ணாமல், அவள் விசுவசித்ததெல்லாம், கத்தோலிக்க தேவாலயத்தின் மத்தியில் ஒரு பீடம் இருக்கிறது. அப்பீடத்திலுள்ள பெட்டகத்தில், கிறீஸ்து, தமது தேவசுபாவத்துடனும், மனித சுபாவத்துடனும் எழுந்தருளியிருக்கிறார் என்பதே!.திவ்ய சற்பிரசாத நாதரே, அவளைத் தம்பால் இழுத்துக்கொண்டிருந்தார்.

சங். வால்ஷ் சுவாமியாரைத் தவிர வேறு எந்த கத்தோலிக்க குருவையும், அவள் இது வரை சந்திக்கவில்லை. எந்த கத்தோலிக்க புத்தகத்தையும் படிக்கவுமில்லை. இரட்சணியம் அடைவதற்கு, ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று மாத்திரம் அவள் கேள்விப்பட்டிருந் தாள். இட்சணியம் அடைய வேண்டும், ஞானஸ்நானம் பெற வேண்டும் என்ற நினைவே அவளை எப்பொழுதும் ஆட்கொண்டிருந்து. பிள்ளைகள் இருவரையும் ஒருநாள், கத்தோலிக்க தேவாலயத்திற்குக்கூட்டிச் சென்றாள். கத்தோலிக்க தேவாலயத்தில், குருவானவர், அவளி டம்,” ஏதாவது தேவையா?” என்று கேட்டார். அதற்கு அவள்,”சுவாமி! என் மக்கள் இருவருக் கும் ஞானஸ்நானம் கொடுக்க முடியுமா?” என்று அச்சத்துடன், கேட்டாள். குருவானவர், அவளையும் பிள்ளைகளையும், தனது இல்லத்துக்குக் கூட்டிச் சென்று, அவளுடைய வரலாற் றைக் கேட்டறிந்தார். தேவ நற்கருணையில் எழுந்தருளியிருக்கும் திவ்ய சற்பிரசாதநாதரு டைய எல்லையில்லா நன்மைத்தனத்தை குறித்து ஆச்சரியமடைந்தவராக, திவ்ய சேசுவுக்கு நன்றி செலுத்தினார்.

பிள்ளைகள் மாத்திரம் ஞானஸ்நானம் பெற்றால், கத்தோலிக்க வேத சத்தியத்தில் அவர் களை வளர்ப்பது யார்? என்ற கேள்வி எழுந்தது. உடனே, மார்த்தாள்,” சுவாமி! நானும் ஞானஸ்நானம் வாங்கலாமா?” என்றாள். அதற்கு, குரு , “தாராளமாய் வாங்கலாம். நானே உன்னை ஞாஸ்நானத்திற்குத் தயாரிப்பேன்” என்று மகிழ்வுடன் பதிலளித்தார். அவரே, அவ ளுக்கு வேதசத்தியங்களைக் கற்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு, அவளும் பிள்ளைகளும் சத்திய திருச்சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவளைத் தம்பால் இழுத்து வந்த திவ்ய சற்பிரசாத நாதரை உட்கொள்ளும் பாக்கியமும் அவளுக்கும் அவளுடைய மக்களுக்கும் கிடைத்தது. தினமும் சர்வேசுரனுக்கு நன்றி செலுத்தி வந்தாள்..

ஜனவரி மாதம் 3-ம் தேதி

ஜனவரி மாதம் 3-ம் தேதி

St. Genovieve, V.
அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் – கன்னிகை
(கி.பி. 422).

அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் 422-ம் வருஷம் பிரான்சு தேசத்தில் பிறந்தாள். அவள் ஏழு வயதில் தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தாள். தன் 15-ம் வயதில் கன்னியர் உடுப்பு தரித்துக்கொண்டாள். நாளுக்கு நாள் புண்ணியத்தில் வளர்ந்து 50 வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சிறிது ரொட்டியும், பருப்பும் அருந்திவந்தாள். மயிர் ஒட்டியாணம் தரித்துக் கடுமையாக தவம் புரிவாள். மிகவும் பக்தி உருக்கத்துடன் இடைவிடாமல் ஜெபத் தியானம் செய்வாள். பிறர் சிநேகத்தை மனதில் கொண்டு பெரிய பட்டணங்களுக்குப் பயணமாய் போய் அநேக புதுமைகளைச் செய்து, தீர்க்கதரிசனங்களைக் கூறி, எல்லோராலும் வெகுவாய் மதிக்கப்பட்டாள். இந்தப் புண்ணியவதியின் மீது காய்மகாரம் கொண்டவர்கள் இவளைப் பலவிதத்திலும் துன்பப்படுத்தினபோதிலும், இந்த அர்ச்சியசிஷ்டவள் சற்றும் கலங்காமல் தன் நம்பிக்கையை ஆண்டவர் மீது வைத்து, ஜெப தபத்தால தன் பகைவர்களை வென்றாள். அச்சமயம் அத்தில்லா என்னும் கொடுங்கோலன் பாரிஸ் நகரைக் கொள்ளையடிக்க வந்தபோது அவள் உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி அந்தப் பெரும் பொல்லாப்பு நீங்கியது. ஜெனோவியேவ் அம்மாள் தன் 89-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.

யோசனை

நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவளைக் கண்டுபாவித்து, துன்ப துரிதத்தாலும் பொல்லாதவர்களுடைய தூற்றுதலாலும் மனம் சோர்ந்துபோகாமலும் உலக உதவியை விரும்பாமலும் ஜெபத்தால் தேவ உதவியை மன்றாடுவோமாக.

ஜனவரி மாதம் 2-ம் தேதி

St.Macarius, A.**அர்ச்.மக்காரியுஸ் – மடாதிபதி**(கி.பி.394)*


அலெக்சாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்து வந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய தீர்மாணித்து, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் கடும் ஜெப தபங்களை நடத்தி வந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம செயல்களைப் பின்பற்றி, புண்ணியவாளராய் வாழ்ந்தார்கள்.

மக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார்.  கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடைவ மாத்திரம் புசிப்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒருநாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குழையைப் புசிக்காமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை புசிக்காமல் மக்காரியுசுக்கு அனுப்பி விட்டார்கள். அவரும் தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அனுசரிப்பதை அறிந்து சந்தோஷமடைந்தார். வனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடைகளை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு இறந்ததினால், அப்பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச்.மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகளுண்டாக, அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர் வயோதிகரான அர்ச்.மக்காரியுஸை பல விதத்தில் துன்பப்படுத்தினார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து கி.பி.394-ம் வருடம் மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்.


*யோசனை*
நாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப்பிரியத்துக்கு இடம் கொடாமல், மட்டசனமென்னும் புண்ணியத்தை கடைபிடிப்போமாக.

ஜனவரி மாதம் 1-ம் தேதி* The Circumcision of Our Lord *விருத்தசேதனத் திருநாள்

LIVES OF SAINTS
அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரம்

ஒவ்வொரு தேதியிலும் வாசிக்க வேண்டிய அந்தந்த அர்ச்சியசிஷ்டவரின் சரித்திரம் சுருக்கமாய் கொடுக்கப்பட்டிருப்பதின் காரணம் யாதெனில், பலர் தங்களுக்கு வாசிக்கப் போதுமான நேரமில்லையென்று சொல்லி அதை வாசியாமல் விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே. நாலைந்து நிமிடங்கூட கிடைக்கப் பெறாமற் போகிறவர்கள் யாருமிரார். மேலும் அந்தந்த தேதியில் குறிக்கப்பட்டிருக்கின்ற யோசனையை விசுவாசிகள் தங்கள் மனதில் வைத்து, அதை அந்தந்த நாளில் அப்போதைக்கப்போது சிந்திப்பார்களேயானால், பெரிதும் ஞானப்பிரயோசனமடைவார்கள்.

ஜனவரி மாதம் 1-ம் தேதி
The Circumcision of Our Lord
விருத்தசேதனத் திருநாள்

திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு
நிறைவேற்றப்படுகிறது.

விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களினின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு. மோசஸ் பத்துக் கற்பனையைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுவரனால் ஏற்படுத்தப்பட்டது. இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள். இச் சடங்கை நிறைவேற்றும் போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும். நமது திவ்விய கர்த்தர் இச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டுமென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார். நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளையையும் பக்தியோடு அநுசரிப்போமாக. மேலும் நமது இருதயத்தில் கிளம்பும் ஆசாபாசங்களையும், ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தம் சிந்தப் பழக வேண்டும். கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.

இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை வி;ட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

யோசனை
நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்ய தீர்மாணித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.

அர்ச், அந்தோனியார் வணக்கமாதம் பதிமூன்றாம் நாள்

அர்ச். அந்தோனியார் பூர்ஜ் பட்டணத்திலிருந்த காலத்தில் அவ்விடத்தில் பேர்போன அவிசுவாசியொருவனிருந்தாள். அவனுடைய பெயர் கய்யார். (Guyard) அவன் கத்தோலிக்கருடைய விசுவாச சத்தியங்களெல்லாம் மறுத்து அநேகருக்குத் தூர்மாதிரிகை காட்டிவந்தான். ஒருநாள் அந்தோனியாருடன் வேத சத்தியங்களைக் குறித்து வெகுநேரம் தர்க்கமாடன்பிறகு தன் தப்பறைகளைக் கொஞ்சம் கண்டுபிடித்தான். ஆனாலும் தேவநற்கருணையில் சேசுநாதர் சுவாமி மெய்யாகவே எழுந்தருளியிருப்பதைப் பற்றி அவன் சந்தேகமுள்ளவனாய், ஒருதாள் அர்ச்சியசிஷ்டவரை நோக்கி அவன் சொன்னதாவது: நீர் ஏதாவது ஒரு பிரசித்தமான அடையாளத்தைக் கொண்டு நீர் போதிப்பதெல்லாம் உண்மைதானென்று ருசுப்படுத்தினால் நானும் என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உம்முடைய வேதத்தை அனுசரிக்க ஏற்றுக்கொள்ளுகிறோம். என்னிடம் ஒரு கோவேறு கழுதையிருக்கின்றது. மூன்றுநாள் வரைக்கும் நான் அதற்குத் தீனி ஒன்றும் வைக்காமல் சகல சனங்களுக்கும் முன்பாக விஸ்தாரமான ஸ்தலத்துக்கு அதையோட்டிவந்து, கொள்ளை அதற்கு முன்பாக வைக்கிறேன். அதே சமயத்கில் சேசுநாதருடைய சரீரமென்று நீர் ‘சொல்லுகிற தேவ நற்கருணையைக் கொண்டுவந்து அதற்குக் காண்பியும். அந்த மிருகம் கொள்ளைச் சட்டைசெய்யாமல் தன் கால்களை மடித்துத் தேவநற்கருணைக்கு முன்பாகச் வணக்கம் செய்தால் நான் உடனே கத்தோலிக்கு வேதத்திற்கு சேருகிறேன் என்றான். |

பக்தி விசுவாசம் நிறைந்த அர்ச்சியசிஷ்டவர் அதற்குச் சம்மதித்துப் போய் அந்த மூன்று நாளும் செபத்திலும், தவத்திலும் செலவழித்தார். குறிக்கப்பட்ட நேரத்தில் ஏற்கனவே திரளான பிரிவினைக்காரரும் மற்றவர்களும் கூடியிருந்த ஸ்தலத்துக்குத் தேவ நற்கருணை வைத்திருந்த கதிர்ப்பாத்திரத்தை எடுத்து வந்தார். அதே தருணத்தில் பட்டினியால் மெலிந்து இளைத்துப்போயிருந்த கோவேறு கழுதைக்கு முன்பாகக் கொள் இருந்த தொட்டியைக் சுய்யாரென்பவன் வைத்தான். அந்தோனியார் கழுதையைப் பார்த்து: நான் அபாத்திரனானாலும் என் கையிலிருக்கிற உன் சிருஷ்டிகருடைய நாமத்தால், புத்தியில்லாத மிருகமே. நான் உனக்குக் கட்டளையிடுகிற தென்னவென்றால், எங்கள் பீடங்களின் மேற் பலியிடப்படும் திவ்விய செம்மறியாட்டுக் குட்டிக்குச் சிருஷ்டிப்புக்கள் யாவும் கீழ்ப்பட்டிருக்கின்றனவென்று அவிசுவாசிகள் கண்டுபிடிக்கத் தக்கதாக, நீ அவருக்கு முன்பாக உடனே வந்து வணக்கம் பண்ணக்கடவாய் என்றார். அந்த க்ஷணத்திலே தானே கோவேறு கழுதை கொள்ளைத் தொடாமல் தேவதற்கருணைக்கு முன்பாக வந்து தன் கால்களை மடித்து வணக்கம் செய்கிற பாவனையாக இருந்தது. கய்யாரும் அவனைச் சேர்ந்தவர்களும் தங்கள் அபத்த மார்க்கத்தை மிட்டு வேறு அநேகரோடு மனந் திரும்பினார்கள். இந்தப் புதுமை நடந்த போதுதான் “பிரிவினைக்காரருடைய சம்மட்டி’ என்கிற மகிமையான பெயர் அந்தோனியாருக்கு ஏற்பட்டதென்று அநேக சொல்லு கிறார்கள். இந்தப் புதுமை நடந்த விடத்திலே சேம் பியேர் லெ கய்யார் (St.Pierre Is Guyard) என்ற கோயில் கட்டப் பட்டிருக்கிறது. திரளான பாவிகளை, பிரிவினைக்காரரை மனந்திருப்ப அர்ச், அந்தோனியார் முன் சொன்ன பிரகாரம் அநேகாநேகம் புதுமைகளைச் செய்து வந்தார்.

அர்ச். அந்தோனியார் பிரகங்கம் செய்வதற்குமுன், தன்னைத்தானே தாழ்த்துவார். வேண்டிக்கொள்ளுவார், தன் சரீரத்தை ஒறுத்துக் கடினமாய்த் தண்டிப்பார். பிறகு ஆண்டவருடைய பேரால் பிரசங்கம் செய்வார். மோசேஸ் என்பவர் சர்வேசுரனுடைய பலத்தால் தமது கோலைக் கொண்டு கற்பாறையில் அடிக்கவே, நீருற்றுண்டானதுபோல, அர்ச். அந்தோனியாரும் ஆண்டவருடைய வல்லமையைக் கொண்டு பிரிவிளைக்காரரை மளந்திருப்ப அநேகமான ஆச்சரியங்களைச் செய்து வந்தார். பூர்ஜ் நகரத்தில் நடந்த புதுமையைக்கொண்டு தேவநற்கருணையின் மட்டில் அந்தோனியாருக்குண்டான பக்தி விசுவாச நம்பிக்கை எவ்வளவென்று நாம் அறிந்து கொள்ளலாம். நம் இருதயத்திலும் அவர் அந்தப் பக்தி எழும்பும்படி அவரை நோக்கி மன்றாடக்கடவோம்.

செபம்

மகா வணக்கத்துக்குரிய அர்ச், அந்தோனியாரே, பிரிவினைக்காருடைய அவிசுவாசத்தைப் போக்க, தேவ நற்கருணையில் சேசுநாதசுவாமி மெய்யாகவே எழுந்தருளி யிருக்கிறதை ஒரு மிருகத்தைக் கொண்டு அதை வணங்கச் செய்து ருசுப்படுத்தின நீர், உயிருள்ள விசுவாசத்தோடு அந்தத் திவ்விய நற்கருணையை நாங்கள் ஆராதிக்கக் கிருபை அடைந்தருளும். – ஆமென் .

நற்கிரியை: திவ்விய நற்கருணையைச் சந்திக்கிறது.

மனவல்லயச் செபம்: தேவ சிநேகத்தால் பற்றி எரிந்த அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.