Devotion to St. Antony in Tamil Day 11

அர்ச், அந்தோனியார் புயி பட்டணத்தில்
நடத்தின வரலாறுகள்  


கொஞ்ச நாட்களுக்குள்ளாக, நெடுஞ் சீவியஞ் சீவித்தார்” வேறு வேத புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியத்தை அர்ச். அந்தோனியாரைப்பற்றி நன்றாய்ச் சொல்லலாம். எப்படியெனில் அர்ச். அந்தோனியார் சீவித்த காலம் கொஞ்சமானதானாலும், அவர் அநேக இடங்கள் சென்று ஏராளமான பிரிவினைக்காரரை மனந்திருப்பி எண்ணிறந்த அற்புதங்கள் செய்ததால் வெகு நாள் சீவித்தாரென்றும் சொல்லலாம்.

1225-ம் வருஷம் செப்டம்பர் மாதத்தில் வேலே (Velay) நாட்டில் புயி (Puy) பட்டணத்தின் மடத்துக்கு அர்ச். அந்தோனியார் சிரேஷ்டராக நியமிக்கப்பட்டார், அவ்விடத்தில் சந்நியாசிகளுக்குச் சகலத்திலும் நன்மாதிரிகை தந்து, தமது பொறுமையினாலும், சாந்த குணத்தினாலும் சகலரையும் மடத்து ஒழுங்குப் பிரகாரம் நடத்தி, அவர்கள் புண்ணியத்தில் மேன்மேலும் வளரும்படி செய்து, சகலராலும் (நேசிக்கவும், வணங்கவும் மரியாதை செய்யவும் பட்டு வந்தார்.

சிறிது காலம் மடத்திலிருந்து தமது சகோதரைப் புண்ணிய நன்னெறியில் நிலை நிறுத்தின பிறகு பிரசங்கம் செய்ய ஆரம்பித்து வேலே தேசத்து மலைகளில் ஓடி ஒளிந்துகொண்டிருந்த பிரிவினைக்காரரைத் தேடி அவர்களை மனந்திருப்பினார். ஆனதால் அவருடைய அமிர்தப் பிரசங்கங்களைக் கேட்க நாலா பக்கங்களிலுமிருந்து மக்கள் கும்பல் கும்பலாய் ஓடி வருவார்கள். புயி பட்டணத்தில் அவரிருந்த கொஞ்ச நாட்களுக்குள்ளாக சர்வேசுரனிடத்தினின்று தாம் அடைந்திருந்த தீர்க்கதரிசன வரத்தை இருமுறை வெளிப்படுத்தினார். எப்படியென்றால், அவரிருந்த பட்டணத்தில் துரிமார்க்கனும் அவிசுவாசியுமான ஒரு மனிதனிருந்தான். அவன் பட்டணத்தில் சகலராலும் அறியப்பட்டவன். அப்பேர்பட்டவனை அந்தோனியார் காணும்போதெல்லாம் அவனுக்கு முன்பாக முழங்காலிலிருந்து வணக்கம் செய்து வருவார். இப்படியிருக்க ஒருநாள் அந்த மனிதன் அர்ச். அந்தோனியார் தன்னை வெட்கப்படுத்தி அவமானம் பண்ணு வதற்காக பரிகாசமாக இவ்விதம் செய்து வருகிறாரென்றெண்ணி அவரைப் பார்த்து: “நீ இவ்விதம் செய்யவேண்டிய காரணமென்ன? சர்வேசுரனுடைய தண்டனைகளுக்கு நான் பயப்படாதிருந்தால், உம்மை என்னுடைய ஈட்டியினால் குத்தி உமது உயிரை வாங்கியிருப்பேன்” என்றான். அப்போது அர்ச்சியசிஷ்டவர் ‘என் சகோதரனே, சேசுகிறிஸ்துநாதருக்காக என் பிராணனைக் கொடுப்பதற்கு என் சீவியகால முழுமையும் ஆசித்தேன். என் ஆசை நிறைவேறச் சுவாமிக்குச் சித்தமில்லை போலும். ஆனால் நீர் வேதத்துக்காக உமது இரத்தம் சிந்துவீரென்று எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நீர் உமது இரத்தம் சிந்தி வேதசாக்ஷி முடி அடையும் போது நான் இன்று உமக்குச் சொல்லுகிறதை நினைத்துக்கொள்ளும்” என்றார், அவர் சொன்ன பிரகாரமே அந்த மனிதன் சிறிது நாட்களுக்குள்ளாக மனந்திரும்பி, துலுக்கருடைய இராச்சியத்தில் வேதம் போதிக்கப்போன குருக்களோடு தானும் சென்று அக்கொடியவர்கள் கைகளில் அகப்பட்டு வேதசாக்ஷி முடி பெற்றார்.

உயர்ந்த குலத்திற் பிறந்த துரைமகள் ஒருத்தி தன் பேறுகாலத்தின் போது அநேகமுறை அர்ச்சியசிஷ்டவரிடத்தில் போய் அவர் தனக்காக வேண்டிக் கொள்ளும்படி கேட்டாள். அர்ச்சியசிஷ்டவர் அவளை நோக்கி நீ நம்பிக்கை யாயிருந்து சந்தோஷப்படு. ஏனெனில் நீ ஒரு குழந்தை பெறுவாய், அவர் திருச்சபையில் பெரியவராவார். அர்ச். பிரான்சிஸ்கு சபையில் உட்பட்டு அவரும் அவர் சொல்லும் புத்தியால் இன்னும் அனேகரும் வேதசாட்சி முடி அடைவார்கள் என்றார். அவர் சொல்லிய வண்ணம் குழந்தை பிறந்து அர்ச். பிரான்சிஸ்கு சபையில் உட்பட்டுக் கடைசியாய் அநேகம் பேர்களோடு துலுக்கர் கையில் அகப்பட்டு வெகுவாய் உபாதிக்கப்பட்டு வேதசாட்சி முடி அடைந்தார்.

அர்ச், அந்தோனியாரைப்பற்றி எழுதப்பட்டிருப்பது என்னவெனில்: ‘ஓ அந்தோனியாரே, உன்னதமான மகிமையாய் உம்மிடத்தில் தீர்க்கதரிசன வரம் விளங்கினதைப் பற்றி மனங்களிகூரும், சர்வேசுரனுடைய தேவ இஷ்டப் பிரசாதத்தினால் நிரப்பப்பட்டிருந்ததினாலல்லவோ, தீர்க்கத்தரிசனங்களை அருளினீர்” என்று எழுதப்பட்டிருக்கின்றது.

சர்வேசுரன் அர்ச். அந்தோனியாருக்குத் தந்தருளின தீர்க்கத்தரிசன வரத்தைக்கண்டு நாம் ஆச்சரியப்பட்டு அவருக்கு நன்றியறிந்த தோத்திரங்கள் செலுத்தி அர்ச். அந்தோனியாருடைய புண்ணிய மாதிரியைத் தாழ்ச்சியுடன் பின்பற்றி நடக்கக் கடவோம்.

செபம்

சிலுவையில் அறையப்பட்டுத் தமது இரத்தமெல்லாம் ஐந்து காயங்கள் வழியாய் மனிதர் இரக்ஷணியத்துக்காகச் சிந்தின சேசுநாதரைப் பற்றி உம்முடைய இரத்தத்தையும் சிந்தி வேதசாட்சி முடியடைய ஆசைப்பட்டவரான அர்ச். அந்தோனியாரே, அபாத்திரரான அடியோர்களுடைய பாவங்கள் சேசுநாதசுவாமி சிந்தின திரு இரத்தப் பலன்களால் பரிகாரமாகும்படி அவரை மன் றாட உம்மைப் பிரார்த்திக்கிறோம். – ஆமென்.

நற்கிரியைஒரு ஒறுத்தல் முயற்சி செய்கிறது.

Leave a comment